Posts Tagged ‘புவனேஸ்வரி’

தற்போதைய ஈழ நிகழ்வுகள்

ஒக்ரோபர் 6, 2009

” சரி அதை விடுங்க நான் முக்கிய விஷயத்துக்கு வர்றேன். நம்ப இலங்கை துணைத் தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி இருக்காரே. அந்தாளு தமிழர்தானான்னு ஒரு கேள்வி. புதுசா வந்த மனுஷன் கொஞ்சம் ஆதரவா நடந்துக்குவாருன்னு பார்த்தா ஏதேதோ பேசி சிக்கல்ல மாட்டியிருக்காரு. பிரபாகரன் பற்றி ஏதும் தெரியாது. ஆனால் அவர் இல்லை. இந்திய அரசாங்கம் கேட்ட அவரோட இறப்பு சான்றிதழ் கொடுப்பார்கள், ஆனால் கொடுக்க முடியாதுன்னு குண்டக்க மண்டக்க பேட்டி தர்றாரு. அங்கன இருக்குற அகதிமுகாம் தமிழர்களை பார்க்க ஒரு குழுவை அழைச்சிகிட்டு போவீங்களான்னு கேட்டா அது என்ன விலங்கியல் பூங்காவான்னு நக்கல் பண்ணியிருக்காரு. கேட்டதும் நம்ம தலைவருங்க டென்ஷனாயிட்டாங்க. மவனே காமெடி கீமெடி பண்ணிட்டிருக்கியா?ன்னு ஆளாளுக்கு காய்ச்சி எடுக்கத் தொடங்கிட்டாய்ங்க. வைகோ, பழ.நெடுமாறன், ராமதாஸ், திருமா, டாக்டர்.கிருஷ்ணசாமின்னு பெரும் பட்டாளமே அந்த புதிய தூதர் வடிவேல் கிருஷ்ணமூர்த்தி மேல பாய்ஞ்சிருக்காங்க. இப்போ…ஐயோ நான் அப்படி சொல்லவே இல்லைன்னு கதறிகிட்டிருக்காராம் வடிவேலு. ஆனாலும் அவருக்கு எதிரான எதிர்ப்பு குரலும் போராட்டமும் நின்ன பாடில்லை. உடனடியா அவரை வெளியேத்தணும்னு ஒத்தைக் காலில் நிக்குறாங்க. எப்படி சமாளிக்குறதுன்னு தெரியாம தவிக்குறாராம்” என்றார் சுவருமுட்டி.

“ஒண்ணும் பயப்பட வேண்டாம்னு சொல்லுங்க. நம்ப தமிழ் தலைவருங்க எல்லாம் சும்மா வாய் சவடால்தான். ரெண்டு நாளைக்கு கத்திட்டு போய்டுவாங்க. அதுக்கு மேல ஒண்ணும் செய்யமாட்டாங்க. அப்படியும் விடாம போராடினா நம்ப சென்ட்ரல் கவர்மெண்ட் இருக்கு காப்பாத்த. அதுவும் இல்லேன்னா நம்ப தமிழின தலைவர் இருக்காரு. விட்டுக்கொடுக்கமாட்டாரு. இதுக்கே இம்புட்டு குதிக்கிற நம்ப தலைவருங்க மத்திய அமைச்சர் ப.சிதம்பரத்தை என்ன செய்யப்-போறாங்களாம்? சினிமாவுல விஜயகாந்த் புள்ளி விபரத்தோட சொல்ற மாதிரி கடந்த ஆறேழு மாதமா சிங்கள கடற்படை தமிழக மீனவர் மீது துப்பாக்கி சூடு ஏதும் நடத்தலை அப்டீன்னு சொல்லியிருக்காரே. என்ன அர்த்தமாம்? அப்புறம் எதுக்கு முதல்வர் கலைஞர் மத்திய அரசுக்கு மீனவர்கள் தாக்குதல் குறித்து கடிதம் எழுதிகிட்டு இருந்தாராம்? அப்டீன்னா கலைஞரை சேர்த்தும் சிதம்பரம் கிண்டல் செய்யுறாரா. என்னப்பா அநியாயம் இது. நடுக்கடலில், அதுவும் இந்திய எல்லைக்குள்ளவே வந்த சிங்கள கடல் சிப்பாய்ங்க, நம்ப தமிழக மீனவர்களை புடிச்சு அம்மணமாக்கி அடிச்சு உதைச்சிருக்கானுங்க. அது என்னாவாம். சுட்டாதான் கேவலமா. கோவணம்கூட இல்லாம அவமானப்படுத்தினானே. அதுக்கு என்ன பண்றதாம்! நம்ப தமிழினத் தலைவரான முதல்வரு இதுக்கு என்ன சொல்லப்போறாரு?” என்று காய்ச்சினார், கோட்டை கோபாலு.

“அட விடுப்பா. இதுக்குபோய் டென்ஷன் ஆகலாமா? என்ன நடந்துடுச்சு. யார் அவமானப்பட்டா என்ன? நமக்கு சென்ட்ரல்ல கேட்ட பதவி கிடைச்சா சரிதானே. மொத்த தமிழனோட மானமே அதுலதான அடங்கியிருக்கு. கலைஞருக்கு சாதகமா சென்ட்ரல்ல காரியம் நடந்துகிட்டு இருக்கிற வரைக்கும், சிங்களவன் நம்ப மீனவர்களை கோவணம் கட்டி ஊர்வலமே நடத்தி காட்டினாலும் கவலைப்படமாட்டாரு. கேட்டது கிடைக்கலன்னாதான் ஐயகோ, உடன் பிறப்பேன்னு இனமானத்தை பத்தி பேசுவாரு. இன்னொரு விஷயத்தை சொல்றன் கேளு. நம்ப திமுக- காங்கிர எம்.பி.ங்க எல்லாம் டெல்லிக்கு போனாங்க. இலங்கையில் இருக்குற அகதி முகாம்களில் இருக்குற ஈழத்தமிழ் மக்களை உடனே விடுவிச்சு, அவிங்களோட பழைய இடத்துக்கே அனுப்பி வைக்கணும்னு கோரிக்கையை வச்சிருக்காங்க. பிரதமரும், அன்னை சோனியாவும், ஆகட்டும் செய்துட்டா போச்சுன்னு உத்திரவாதம் கொடுத்திருக்காங்க. ஏன்யா…இதுக்கு முன்னாடி பல தடவை டெல்லிக்கு போய் நின்னீங்க. அப்பாவி தமிழ் மக்கள் மீது குண்டுவீச்சு நடத்தகூடாது. உடனடி போர் நிறுத்தத்துக்கு வழிசெய்யுங்கன்னு எத்தனை முறை கதறி கோரிக்கை வச்சீங்க. அப்போவெல்லாம் செய்யாத பிரதமரு இப்போ மட்டும் எப்படி செய்யப் போறாருன்னு கேட்டா அது வேற, இது வேறன்னு டபாக்கிறாய்ங்க. நல்ல தமாஷ் பண்றாங்கப்பா” என்று நக்கலடித்த சுவருமுட்டியை முந்திகொண்டு “எம்பா சுவருமுட்டி. இங்கன இருக்கிற இலங்கை அகதிகளுக்கு எல்லாம் இந்திய குடியுரிமை வேணும்னு வேற கேட்டிருக்காரே தலைவரு. எம்புட்டு அக்கறை பார்த்தீயா?” என்று மேலும் வாயை கிளறினார்.

“இதுதான் வேண்டாம்ங்கிறது. சும்மா ஏதாவது கேட்டு என்னைய உசுப்பேத்துவீங்க. நான் மனசுல பட்டதை சொல்லுவேன். அப்புறம் என்னைய வம்புல மாட்டிவிட்டுட்டு நீங்கபாட்டுக்க கிளம்பிடுவீங்க. முதல்ல நம்ப ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்திய குடியுரிமைங்கிறது இருக்கட்டும். இந்திய நாட்டுல திபெத், சீனா, பாகிஸ்தான், பர்மா அகதிகள் என நிறையபேரு இருக்காங்க. அவிங்க யாரையும் சிறப்பு முகாம்னு சொல்லி தனியா பிரிச்சு பல வருஷமா உள்ள வைக்கல. ஆனா ஈழத்தமிழ் அகதிகளை மட்டும் அப்படி செங்கல்பட்டு முகாமில் வச்சிருக்காங்க. அதுவும் ரொம்ப வருஷமா. எந்த மீடியாவும் பார்க்க அனுமதி கிடையாது. மற்ற ஆதரவு இயக்க தலைவர்களையும் உள்ளே விடுறதில்லே. வெளியில இருக்கிற மற்ற அகதிகள் நிலைமையும் மோசமாதான் இருக்கு. நம்ப தமிழின தலைவரு, முதலில் இதை சரி பண்ணட்டும். பிறகு டெல்லிகிட்ட இந்திய குடியுரிமை பூவை காதுல சுத்தத்ட்டும். கேழ்வரகுல எண்ணெய் வடியுற கதைன்னு சொல்வாங்களே. இதுதான் அது. திடீர்னு இலங்ககை தமிழ் அகதிகள்மேல அக்கறை வந்திருக்கிற மாதிரி, அதை அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவுல தி.மு.க-வின் தீர்மானமா வேற போடுறாரு. மகள் கனிமொழிக்கு எம்.பி. சீட்டுக்கு எந்த தீர்மானம் போட்டாரு? மகன் அழகிரிக்கு மத்திய மந்திரி பதவி வாங்க எந்த தீர்மானத்தை போட்டாரு? இன்னொரு மகனுக்கு துணை முதல்வர் பதவிக்கு எந்த தீர்மானத்தை போட்டாரு? சத்தமில்லாம குடும்பத்துக்குள்ள பேசி பட்டுன்னு நடத்தி காட்டிடலையா? அந்த மாதிரி மாநில அதிகாரத்தை வச்சிருக்கிற கலைஞர் உடனே முகாம்களில் இருக்கிற இலங்கை அகதிகளுக்கு செய்ய வேண்டியதை தாராளமா செய்யலாமே. யாரு தடுப்பாங்க. எந்தவித விசாரணையும் இல்லாம சிறப்பு முகாம்ங்கிற ஸ்பெஷல் ஜெயிலில் வச்சிருக்கிற அகதிகளையும் சாதாரண முகாமுக்கு மாற்றலாமே. ஏன் செய்யல? ஆக, ஆகாத வேலைக்குத்தான் தீர்மானம் போடுவாரு”போட்டுத் தாக்கினார் சுவருமுட்டி.

“என்னப்பா இப்படி சொல்றே. கலைஞர் கேட்ட இந்திய குடியுரிமை பற்றி சென்ட்ரல் கவர்மெண்ட் ரொம்ப அக்கறை எடுத்துகிட்டிருக்காமே. கூடிய சீக்கிரத்தில் அதைச் செய்யுறதா சொல்றாங்களே.நம்ப சென்ட்ரல் மினிஸ்டர் ப.சிதம்பரம் கூட நடக்கும்னு சொல்லிட்டு போறாரே. கலைஞரோட முயற்சியை நீ ரொம்பதான் நக்கல் பண்ற. இது நல்லதில்லே” கோட்டை கோபாலு.

“வேண்டாம்யா. உள்ளதைச் சொல்றன். திரும்பவும் என் வாயை புடுங்கற. ஒரு விஷயத்தை சொல்லட்டுமா. கேட்டா அப்படியான்னு சொல்வே. நம்ப தமிழ் எம்.பி.ங்க எல்லாம் டெல்லிக்கு போனாங்க இல்ல. பிரதமரை சந்திக்குற அந்த நிகழ்ச்சியில திருமாவளவன் கலந்துக்க முடியல. தாமதமா போயிருக்காரு. அதுக்கு பிறகு சோனியாவை சந்திச்சப்போதான் திருமா கலந்துகிட்டாரு. அந்த நேரத்துல தமிழ்நாட்டுல இருக்கிற இலங்கை அகதிகள் எல்லாம் பல வருஷமா இங்கன இருக்காங்க. அவிங்களுக்கு இந்திய குடியுரிமை வேணும்னு கேட்டதோட, தமிழ்நாட்டுல இருக்கிற அகதிகள் முகாம் நிலையை பற்றியும் எடுத்துச் சொன்னாராம். கவனமா கேட்ட சோனியா அப்படியான்னு ஆச்சர்யப்பட்டு இந்த விஷயத்தை பிரதமர்கிட்ட சொன்னீங்களான்னு கேட்டிருக்காரு. “இல்லீங்கம்மா. நான் லேட்டா வந்தேன்னாரு திருமா. போய் பிரதமர்கிட்ட சொல்லுங்கன்னு முடிவா சொன்னாரு. அந்த நேரத்துல கூட இருந்த டி.ஆர். பாலுகிட்ட திருமா பேசியிருக்காரு. அப்புறம் கூட்டா சேர்ந்து பிரதமர்கிட்ட பேசியிருக்காங்க. அந்த சம்பவம் பத்தின தகவல் அப்படியே தமிழின தலைவருக்கு வந்தது. ஆகா நடந்துடும் போலிருக்கே. அந்த அம்மா சோனியா இம்புட்டு விவரமா காதுகொடுத்து கேட்டிருக்கே. விடக்கூடாதுன்னு ப்ளான் பண்ணாரு. உடனே நடந்த அண்ணா நூற்றாண்டு நிறைவு விழாவில் தீர்மானம் போட்டு அவரு கையில எடுத்கிட்டாரு. இந்த விஷயத்தை ஒரு காங்கிரஸ் கட்சி வி.ஐ.பி.தான் எதார்த்தமா சொன்னாருப்பா” என்றார், சுவருமுட்டி

“ங்கொய்யால.. இம்புட்டு விஷயம் இருக்கா. அதான பார்த்தேன். ஏன்னா இத்தனை வருஷமா கலைஞர் தமிழ் நாட்டுலதான இருக்காரு. முதல்வராகி மூன்று வருஷமாகுது. இம்புட்டு நாளும் தோணாத இந்த உணர்வு திடீர்னு எப்படி வந்துடிச்சின்னு அப்பவே சந்தேகப்பட்டேன்” என்ற ஆட்டோ அன்வர்பாய், “இப்போ அதுலேயும் ஒரு சிக்கல் இருக்காமே. மத்திய அதிகாரிங்க சிலபேரு அந்த மாதிரி இந்திய குடியுரிமை கொடுக்க முடியாது. நிறைய சிக்கல்கள் இருக்குதுன்னு சொல்றாங்களாம். இலங்கை தமிழ் அதிகளுக்கு மட்டும் அப்படி கொடுத்துட்டா மற்ற நாட்டுல இருந்து வந்த அகதிகளுக்கும் கொடுக்க வேண்டியிருக்கும்.அவங்களும் கோரிக்கை வைப்பாங்க. பாகிஸ்தான் அகதிகள் என்றால் இளப்பமா என்று முஸ்லீம் அமைப்புகள் குரல் கொடுக்கும்.இப்படியே ஒவ்வொரு நாட்டு அகதிகளுக்கும் ஆதரவா எல்லாரும் வந்துடுவாங்க. அதனால குடியுரிமை கொடுக்குறது சிக்கலான விஷயம்தான்னு அடிச்சு சொல்றாய்ங்க. ஆனாலும் கலைஞர் கேட்கிறாரு. ப.சிதம்பரமும் சொல்றாருன்னு சும்மா கேட்டிகிட்டிருக்கு சென்ட்ரல்! கேட்டாக்கா உடனே செய்துடவா போறாங்க. அரசியல்ல இதெல்லாம் சகஜம்பா..” என்று கலாய்த்ததோடு, “இன்னொரு சங்கதியும் இதுல இருக்குப்பா… இலங்கை அகதிகளுக்கு இந்திய குடியுரிமை கொடுக்க கூடாது. அப்படி செய்தா அது அவர்களுக்கு பாதிப்பாதான் போய் முடியும். பிறகு இலங்கையில் இருக்கிற அவர்களின் சொத்து சுகம், உரிமைன்னு எல்லாத்தையும் அப்படியே விட்டுட வேண்டியதுதான்ங்கிற எதிர்ப்பு குரலும் கிளம்பியிருக்கு. காங்கிரஸ் கட்சி எம்.பி.யான சுதர்சனம் நாச்சியப்பன் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்காரு. வெளிநாட்டுல இருக்கிற தமிழர்கள் எல்லாம் இலங்கைக்கு போகணும். குறைந்த பட்சம் வீட்டுக்கு ஒருவராவது போகணும்.அங்க போய் அவர்களின் பூர்வீக சொத்து இருக்கிற இடத்துல உட்காரணும். எங்கட நிலம், பூமி இந்த இடத்துல இருக்கு அதை திருப்பி கொடுன்னு கேட்கணும். அப்பதான் ராஜபக்சேவுக்கு உண்மயான நெருக்கடி வரும். அப்படி செய்யாம போனா இலங்கை அரசுக்குதான் ரெட்டை சந்தோஷம் வரும். நம்ப தமிழனோட நிலத்தை எல்லாம் எடுத்து சிங்களவனுக்கு கொடுத்துடுவான். நம்ப பூர்வீக இடத்துல சிங்கள குடியிருப்பை கொண்டு வந்துடுவான்னு சொல்றாரு…” என்றார்.

“என்னப்பா இது விளையாட்டு விஷயமா என்ன. இருக்கிறவன் உயிருக்கே உத்ரவாதம் இல்லேன்னுதான் இப்படி அகதியா வெளிநாட்டுக்கு ஓடிவந்திருக்காங்க.அவிங்கள போய் நீங்க உங்க சொந்த இடத்துக்கு போங்கன்னு சொல்றது சரிப்படுமா?”-சித்தன்.

“அதைத்தான் நான் கேட்டேன். அதுக்கு அந்த காங்கிரஸ் எம்.பி. என்ன சொல்றாரு தெரியுமா?அதையே மத்திய மாநில அரசுகிட்ட கோரிக்கையைா சொல்லுங்க. உலக நாட்டுக்கு கோரிக்கையைா சொல்லுங்க. நாங்க இத்தனை ஆயிரம் பேர் சொந்த நாட்டுக்கு போகிறோம். அனைவருமே அப்பாவி மக்கள்தான். எங்கள் மீது புலி முத்திரை ஏதும் குத்தகூடாது. எந்தவித ஆயுதத்தையும் எடுத்துகிட்டு போகல. எங்க பேரில் எந்தவித பொய் வழக்கையும் பதிவு பண்ணக்கூடாது. எங்க சொந்த இடத்துல சுதந்திரமா இருக்க எல்லாவித உத்ரவாதமும் கொடுக்கணும்னு சொல்லுங்க. இந்தியாவையும் உலக நாடுகளையும் அப்படி நிர்பந்தம் பண்ணுங்க. அழுத்தம் கொடுங்க. அதுக்கு எந்த நாடும் முடியாதுன்னு மறுக்காதே. அது மனித உரிமை பிரச்னை அல்லவா. கட்டாயம் ஒத்துழைக்கும். அந்தமாதிரி ஒத்துழைப்போட போகும்போது அங்க சிங்கள அரசு ஏதாவது தொந்தரவு செய்தா, அப்போது இந்த நாடுகள் எல்லாம் தலையிட்டு தட்டி கேட்க தயங்காதே. ஏன் அதை செய்ய மறுக்கிறீர்கள்னு சொல்றாரு” என்றார்.

“என்னமோப்பா, அவிங்களை வச்சி காமெடி ஏதும் பண்ணாம இருந்தா சரிதான்” என்ற சுவருமுட்டி, “தமிழ்த் திரையுலகம் திரண்டு ஒரு போராட்டம் செய்யப் போகுதாமே…” என்றார். “என்னப்பா திரும்பவும் ஈழ ஆதரவு போராட்டமா?” என்றார், கோபாலு.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லே. இது பலான விஷயம் பத்தினது. சமீபத்துல புவனேஸ்வரின்னு ஒரு நடிகையை அந்த தொழில் செய்யறதா சொல்லி போலீஸ் கைது செஞ்சது. அப்போ அந்த நடிகை நான் மட்டுமா. அந்த நடிகை தொழில் பண்றாங்க. இந்த நடிகை தொழில் பண்றாங்க. என்னைய மட்டும் பிடிச்சா எப்படீன்னு கூறி சில நடிகைகளின் பெயரைச் சொன்னதாக நாளேடு ஒண்ணு செய்தி போட்டுடுச்சு. அத பார்த்துட்டு அந்த நடிகைகள் எல்லாம் கொதிச்சுபோய் நடிகர் சங்கத்துல முறையிட்டிருக்காங்க. பொய்ச் செய்தி போட்டு இல்லாத அவப்பெயரை ஏற்படுத்தியிருக்காங்ன்னு புலம்பியிருக்காங்க. அதனால நடிகர் சங்கம் அவசர கூட்டத்தை கூட்டி ஆலோசனை நடத்தியிருக்கு. முடிவா, சென்னை போலீஸ் கமிஷனரை சந்திச்சு புகார் கொடுத்ததோட வர்ற ஏழாம் தேதி அன்னைக்கு ஒரு நாள் கண்டன போராட்டம் நடத்துறதா அறிவிச்சிருக்காங்க. அதுதான் இந்தளவுக்கு பரபரப்பாகியிருக்கு…” என்றபடியே எழுந்தார். அலப்பறைக்கூட்டம் கலைந்தது.

நன்றி : குமுதம்

Advertisements