Posts Tagged ‘திலீபன்’

வீழ்வது விதையாகும் – உருகுவது ஒளியாகும்

நவம்பர் 17, 2009
அக்கினி குஞ்சாக மாறினான் பார்த்தீபன். அதை நல்லூரில் வைத்து போரட்டத்தீ வளர்த்தான். பொந்தில் வைத்தால், காடுகளே வெந்து தணியும். ஆனாலும், இன்னமும் தணியவில்லை அவன் மூட்டிய பெருநெருப்பு.

theliipan_shangar_20090906.jpg

இந்திய வல்லாதிக்கத்தின் வஞ்சக நகர்விற்கு எதிராக, போராட்ட வடிவத்தை மாற்றிய தியாகி திலீபன், ஐந்து கோரிக்கைகளை முன்வைத்து, உயிர் துறக்கும் வரையான உன்ணாநிலைப் போரினை முன்னேடுத்தான். ரூபாய் நோட்டில் காந்தியை வாழவைக்கு இந்திதேசம், விடுதலைப் புலிகளிள் அறவழிப் போராட்டத்தை கண்டு சினமடைந்தது.எமது போராட்ட வடிவங்கள் மாறினாலும், இந்தியாவின் இலக்கு மட்டும் மாறவில்லை. சொந்த நலனைக் காப்பாற்ற, தமிழ் மக்களின் எத்தகைய போராட்ட வடிவங்களையும், இந்திய வல்லாதிக்கம் ஏற்றுக் கொள்ளாது என்பதற்கு, தியாகி திலீபனின் வீரச்சாவு மிகப் பெரிய சான்றாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது.

இந்தியாவின் காந்திய முகமூடி கிழித்தெறியப்பட்டது நல்லுரில்தான். அணு ஆயுதம் தாங்கிய காந்திதேசம், இன விடுதலையின் அறவழிப் போராட்டத்தை, குழி தோண்டிப் புதைத்ததும் நல்லுரில்தான். அவனது இறுதிமூச்சு, தாயகக் காற்றில் கரைந்து, இன்னமும் உயிர்ப்புடன் வாழ்வதை, இந்தி தேசம் உணர்வதாகத் தெரியவில்லை. துறைமுகங்களில், அனல் மின் நிலையங்களில், மன்னார் கடற்பரப்பில் பிணைக்க ப்பட்டுள்ள இந்திய நலன்கள், திலீபனின் தியாகத்திற்கு பதில் கூறியே தீரவேண்டும்.

சிங்களத்தின் போலி வாக்குறுதிகளால், காந்தியை மறந்து பாரத தேசம். பன்னிரு வேங்கைகளும் துடித்து மடிந்ததை கை கட்டி வேடிக்கை பார்த்தது. முள்ளிவாய்க்காலிலும், பேரினவாதத்தின் முதுகுதடவல்கள் தொடர்ந்தன. இந்தியாவின் சட்டிலைட் கண்கள், வன்னியை அளந்து, சிங்களத்திடம் உளவு சொன்னது. நீட்டிய நேசக் கரங்களை வெட்டி வீழ்த்தப்பட்ட போதும், சிங்களத்தின் வாக்குறிதிகளால் மயங்கிக் கிடந்து இந்தியா.
இன்னமும் மயங்குகிறது. மயங்கிச் சரியும் போது, சிங்களத் தீவினில் சீனக் கம்பளங்கள் விரிக்கப்பட்டிருக்கும்.

அன்று திலீபன் சொன்ன செய்தியை, இன்றுவரை இந்திய அதிகாரவர்க்கம் உணர்ந்து கொள்ளவுமில்லை, உணரப் போவதுமில்லை.அகிம்சைப் போரில் கரும்புலியானவனே தியாகி திலீபன். அவர் வெடித்துச் சிதறவில்லை. உயிர் பூவை உதிர்த்து, மக்கள் மன உணர்வில் பெரும் வெடிப்பதிர்வுகளை உருவாக்கியவன்.சகல சமூக ஒடுக்குமுறைகளையும், பூர்சுவா சிந்தனைகளையும் அறுத்தெறிந்து, மானுட விடுதலையின் ஒரு பரிமாணமான தேசிய இன விடுதலையை வென்றெடுக்கும் ‘மக்கள் புரட்சி’ குறித்தே அவன் பேசினான். ஒரே இன குழுமத்தினுள். சாதீய, மத ஒடுக்குமுறையைக் காவித் திரிந்தவாறு, மக்கள் புரட்சியை நிகழ்த்த முடியாது. ஒடுக்குமுறைகள் பல வடிவங்களில் வியாபித்திருந்தலும், அவையாவும் பேரினவாதத்தின் ஒடுக்குமுறைக்கு எந்த வகையிலும் குறைவானதல்ல.

ஆகவே மக்களை அணிதிரட்டும் போது, அகநிலை முரண்பாடுகனையும் கருத்தில் கொள்ளல் வேண்டும் அப்போதுதான் திலீபன் தரிசிக்க விரும்பும் மக்கள் புரட்சியின் பூரண வடிவம் முழுமை பெறும். யுத்தம் என்பது இரத்தம் சிந்தும் அரசியல் என்றால், சகல அயுதப் போராட்டங்களும் அரசியல் போராட்டத்தின் வடிவங்களே. அவை கையாளும் அரசியல் கோட்பாடுகளை பொறுத்தே, அவற்றினை ‘மக்கள் யுத்தம்’ என்றும் ‘ஆயுதக் கிளர்ச்சி’ என்றும் பிரித்துப் பார்க்கப்படுகிறது. ஆனாலும் தேசிய இன விடுதலைக்கான ஆயுதப் போராட்டமானது தற்காலிகமாக நிறுத்தப்பட்ட நிலையில், திலீபனின் மக்கள் புரட்சிக்கான அறைகூவல் உயிர்ப்புடன் இயங்குகிறது.

ஒடுக்குமுறை வடிவங்கள் வியாபித்தவண்ணமுள்ளது. வவுனியா வதைமுகாம், வடக்கு – கிழக்கெங்கும் கிளைபரப்பி விரிகின்றது. இயல்பு வாழ்வினை மீட்டெடுக்கும் போராட்டமா?, அல்லது தீர்வுத் திட்டங்களை அரங்கேற்ற, மேடைகள் தேடும் நகர்வுகளா?
அல்லது இந்திய நலன் எதுவென்று ஆய்வு செய்யும் போக்குகளா?, அல்லது இவை மூன்றும் இணைந்த புதிய தளமா? இவற்றில் தடம் பதிக்க முன், திலீபனின் ‘மக்கள் புரட்சி’ குறித்தும், அதை முன்னெடுக்கும் வழிமுறை பற்றியும் சிந்திக்க வேண்டிய காலமிது.

ஆழ ஊடுருவிய சிங்களத்தின் மாயக்கரங்களால், கேணல் சங்கரும் இந்நாளில் வீழ்த்தப்பட்டார். ஆயுதப் போராட்ட பரிமாணத்தை, வானளாவ உயர்த்திய, உறுதிமிக்க விடுதலைப் போராளி அவர். வீழ்ந்த சங்கரும் விதையானார். உயிரை உருக்கிய திலீபனும் ஒளியானான். அர்ப்பணிப்புக்கள் வீண்போகாது. வீழ்த்தப்பட்ட விதைகள் மறுபடியும் முளைக்கும். அதேவேளை, சிங்களத்துடன் இந்தியா செய்துகொண்ட உடன்படிக்கையே, தமிழ் மக்களிற்கான தற்காலிகத் தீர்வினைக் கொண்டுவருமென்கிற வகையில், பழைய விதைகளும் விதைக்கப்படுகின்றன.

அதாவது, இலங்கை – இந்திய ஒப்பந்தம் உருவாக்கிய, தற்காலிக வட-கிழக்கு இணைப்பு மாகாண சபையானது, சிங்களக் குடியேற்றத்தைத் தடுத்து நிறுத்தி விடுமாம்.

ஆகவே, இந்தியா இல்லாமல், தமிழ் மக்களின் அரசியல் பிரச்சினையைத் தீர்க்க முடியாதென்பதால், சிறீலங்காவின் இறையாண்மை பாதிக்காதவாறு, இந்தியா வரைந்த மாகாண சபையை ஏற்று, குடியேற்றங்களைத் தடுக்க வேண்டுமாம். வேடிக்கையான விவகாரமிது. இந்தியப்படை சூழ, திருமலையில் நடைபெற்ற மாகாண சபை விவாதங்களில், காணி உரிமைக்கும், காவல்துறை நிர்மாணிப்பிற்கும், சுயாதீன நிதிக் கையாள்கைக்கும், முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் சிங்கள ஆட்சியாளர்களுடன் நிகழ்த்திய சூடான விவாதங்களையும், மோதல்களையும் பலர் மறந்து விட்டார்கள்.

மாகாண சபைக்கு, உரிமைகளை வழங்க மறுத்த சிங்களத்துடன் விடாக்கண்டன் போக்கினால், ஈழப் பிரகடனம் செய்ய வேண்டிய நிலைக்கு வரதராஜப்பெருமாள் தள்ளப்பட்டார். இவை தவிர, நிகழ்கால அனுபவங்களைப் பார்த்தால், பிரிக்கப்பட்ட கிழக்கு மாகாண சபைக்கும் இந்த உரிமைகளை வழங்க சிங்களம் மறுக்கின்றது. ஆயுதக்குழுத் தலைவர் முதலமைச்சர் பிள்ளையான், அரசோடு இணைந்திருந்தும் இவ்வுரிமைகளைப் பெறமுடியவில்லை.

ஆகவே சில தமிழக தலைவர்கள் உட்பட, எல்லோரிற்கும், கனவு காணும் உரிமையுண்டு.

ஆனால் வரலாற்றில் பதிவான நிஜங்கள் மறுதலித்தவாறு, மீண்டும் ஒரு விசப் பரீட்சையில் குதிக்கும்படி அறிவுரை வழங்குவது, இக்காலகட்டத்தில் பொருத்தப்பாடான விடயமாகத் தோன்றவில்லை.13வது திருத்தச் சட்டத்திலும், அரச பிரதிநிதியான கவர்னரை (அதிபர்) மீறி காணி, நிதி விவகாரங்களைக் கையாளும் பூரண சுதந்திரத்தினை தமிழர்கள் அனுபவிக்க முடியாது. ஆனாலும் சிங்களம் வழங்க விரும்புவது கிராமசபை அல்லது அதற்கு ஒருபடி மேலுள்ள பிரதேச சபை மட்டுமே.மாகாண சபையில் பங்கெடுத்தாலும், சிங்களக் குடியேற்றங்களை நிறுத்த முடியாது. அதற்கு எதிராக இந்தியா அழுத்தம் கொடுக்க முனைந்தால், சில இந்தியக் கொம்பனிகளுக்குஅனல் மின் நிலையம் அமைக்க, தமிழர் நிலங்கனைள பகிந்தளிர்த்து, அவர்களின் வாயையும் அடைத்துவிடும் சிங்களம். அவைதான் இப்போது நடைபெறுகிறது. வன்னி நிலங்களை விவசாய ஆராட்சிக்கு வழங்கினால். இந்திய ஆளும் வர்க்கம் எம்மை திரும்பிக் கூடப் பார்க்காது.

இந்தியா அதிகம் வெருட்டினால், இருக்கவே இருக்கிறது பலம்மிக்க சீன தேசம். ஆகவே இந்திய பாதுகாப்பிற்காகவும், பொருளாதார நலனிற்காகவும் இன்னமும் பல விட்டுக் கொடுப்புக்களை செய்யுமாறு சிலர் வலியுறுத்துகிறார்கள். திலீபனை இழந்தது போதும். இத்தனை இலட்சம் மக்களையும் இழந்தது போதும். பரஸ்பர நலன் என்பது ஒருவழிப் பாதையல்ல என்பது இந்திய மத்திய அரசுக்கு, தமிழ்நாடுதான் எடுத்துக் காட்ட வேண்டும்.

சிங்களக் குடியேற்றத்தை விட, இந்தியா அபகரிக்கும், அபகரிக்க போகும் தமிழர் நிலங்களும், கடற் பிரதேசங்களும் அதிகமென்பதை இவர்கள் உணர்வார்களா?

சீனா உள்நுழையாமல் இருப்பதற்கு, இன்னமும் பல விட்டுக் கொடுப்புக்கள் செய்யும்படி இந்தியா எதிர்பார்கின்றதா?
இழந்தது போதும்.

– இதயச்சந்திரன்
ஈழமுரசு

Advertisements

மக்கள் புரட்சி வெடிக்கட்டும் ! சுதந்திர தமிழீழம் மலரட்டும் !!

நவம்பர் 17, 2009
தியாகசீலன் திலீபனின் நினைவுநாளை அனுஷ்டிக்கும் இத்தருணத்தில், இருபத்தியிரண்டு வருடங்களுக்கு முன்பு … அன்று நல்லூர் முன்றலில் அந்த தியாகி கூறியவை வெறும் வார்த்தைகள் அல்ல அருள்வாக்குகள் என்பதை தற்பொழுது நாம் உணர்கின்றோம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும்" என அன்று தியாகி திலீபன் கூறிய வாக்கு இன்று ஈழத்தமிழினத்திற்கு அவசியமான ஒன்றாக மாறியிருக்கின்றது. "இனவிடுதலைப் போராட்டம்" என்பது அது எவ்வகையில் அமைந்தாலும் அந்த இன மக்களின் பூரண ஆதரவு இல்லாமல் மேற்கொள்ள முடியாது.

ஒட்டுமொத்த மக்களும் விடுதலையென்ற ஒரே இலட்சியத்திற்காக தமது பங்களிப்பினைச் செய்ய முன்வர வேண்டும். அவ்வாறு முன்வரும்போதுதான் விடுதலைக்கான மக்கள் புரட்சியும் அதன்மூலமான விடுதலையும் சாத்தியப்படும். ஈழ விடுதலைப் போராட்டமானது தியாகங்களின் சிகரங்களைத் தொட்ட சந்தர்ப்பங்களில், தியாகச்செம்மல் திலீபனின் தியாகம் மிக முக்கியமானதாகும்.

தமிழர்களின் விடுதலைப் போராட்டம் பல சந்தர்ப்பங்களில் ஆயுத ரீதியிலான வன்முறை வழியைத் தவிர்த்து அகிம்சை வழியை கடைப்பிடிக்க முனைந்த போதெல்லாம், எதிர்மறையான விளைவுகளையும் ஏமாற்றங்களையுமே பரிசாகப் பெற முடிந்தது. அகிம்சைக்கே அடையாளமென கருதப்படும் காந்திஜி அவர்களின் தேசமான இந்தியாவே தமிழர்களின் அகிம்சைப் போராட்டத்தினை காலடியில் போட்டு மிதித்தது.

ஒரு துளி நீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதமிருந்த திலீபனின் உடல்… வாடி வதங்கி, மெலிந்து சுருண்டு, நிலைகுலைந்து நினைவிழந்துபோய் அந்த உன்னத ஆன்மா அவன் உடலைவிட்டு பிரிந்த போதும்… மெளனமாய் இருந்து ஒட்டுமொத்தத் தமிழினத்திற்கே துரோகம் செய்ததன் மூலம் "காந்தியம்" என்ற திரைக்குப் பின்னாலிருந்த தனது உண்மையான கோரமுகத்தினை வெளிக்காட்டியது காந்திதேசம்.

அன்று வெளிக்காட்டத் தொடங்கிய காந்திதேசத்தின் துரோக நாடகம் இன்றுவரை தொடர்கதையாகத் தொடர்கின்றது. ஈழத்தின் மேல் இந்தியாவிற்கு அப்படி என்னதான் கோபம்??? காரணம் கேட்டால், இராஜீவ்காந்தி படுகொலை… இந்தியத் தேசியம்… பிராந்திய நலன்… என காரணமில்லாத காரணங்களை அடுக்குவார்கள் இந்த காந்தியவாதிகள். இந்த போலிக் காந்தியவாதிகளுக்குத்தான் புரியுமா எம் வலிகளும் வேதனைகளும்??? இவர்களுக்குத் தெரியுமா நம் இழப்புக்களும் அவலங்களும்???

தமிழீழம் என்ற கோரிக்கையையும் அதற்கான தமிழர்களின் நியாயமான போராட்டங்கள் தொடர்வதையும் காங்கிரஸ் தலைமையிலான இந்திய அரசு எப்போதுமே ஆதரிக்கப்போவதில்லை என்ற கசப்பான உண்மையை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும். இது உண்மையென்பதைத்தான் அண்மையில் புலம்பெயர் தமிழர்கள் தொடர்பாக இந்திய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே நாராயணன் விடுத்த அறிக்கையும் தெளிவுபடுத்துகின்றது.

அதனைப் புரிந்து கொள்ளாமல், தொடர்ந்தும் இந்தியா மனம்மாறும் என நம்பியிருப்போமானால், அன்று திலீபனை நாம் இழந்ததைப்போல் எதிர்காலத்தில் எம் இலட்சியங்களையும், நம் தாய் மண்ணையும் இழந்து நிரந்தரமான அகதிகளாகவே வாழ வேண்டிய இழிநிலைக்கு ஆளாவோம். இந்தியாவின் ஆதரவு தமிழர்களிற்கு கிடைக்கக்கூடிய சந்தர்ப்பம் தற்போதைக்கு இல்லையென்பது உறுதியாகிவிட்ட நிலையில், தமிழர்கள் தமக்கு ஆதரவளிக்கக் கூடிய பிறநாடுகளின் ஆதரவினைத் திரட்டவேண்டியது அவசியமாகிறது.

இந்தவகையில், இவ்வளவு காலமாக தமிழர் விடயத்தில் பாராமுகமாக இருந்துவந்த அமெரிக்கா, கனடா, அவுஸ்ரேலியா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தமிழர்களுக்கு சார்பாக ஆதரவளிக்கக்கூடியதாக மாறிவரும் சர்வதேச நிலைமாற்றங்கள் ஈழத் தமிழர்களுக்கு சாதகமாக அமையக்கூடும். இதனைச் சாதகமாக கையாளுவதன்மூலம், தமிழர்கள் தமது தாயக விடுதலைக்கான போராட்டப் படிமுறைகளை வெற்றியை நோக்கி முன்னகர்த்தக்கூடிய சாத்தியம் வலுப்பெறும்.

சிங்கள அரசோடு கூட்டுச்சேர்ந்து நிற்கும் இந்தியா, சீனா உள்ளிட்ட ஒருசில நாடுகளைத் தவிர பெரும்பாலான சர்வதேச நாடுகளின் நடவடிக்கைகள் இலங்கையரசிற்கு எதிராக மாறிவருவதை அவதானிக்க முடிகிறது. இவ்வாறு சாதகமான புறச்சூழ்நிலை உருவாகுவதற்கு, புலம்பெயர் தமிழர்கள் கடந்த காலங்களில் நடத்திய போராட்டங்களும், மக்களின் அவலங்கள் சர்வதேசத்தின்முன் வெளிக்கொணரப்பட்டமையுமே பெரிதும் உதவின.

அத்துடன் சிங்கள அரசின் எதேச்சைத்தனமான அதிகாரப்போக்கும், வல்லரசுத் தோரணையிலான அறிக்கைகளும் கூட சர்வதேச நாடுகளுக்கு இலங்கையரசின் மீது சினத்தினை ஏற்படுத்தியிருக்கின்றது. புலம்பெயர் தேசத்தில் தமிழர்களால் தொடரப்பட்ட போராட்டங்கள் சர்வதேச மட்டத்தில் பல விடயங்களை சாதித்திருக்கின்றன என்பது தற்பொழுது மெல்ல மெல்ல சாதகமாக மாறிவரும் சர்வதேச நிலைப்பாடுகளிலிருந்து தெரிகின்றது.

ஈழத்தமிழர் விடயத்தில் உலகில் செல்வாக்கு மிக்க நாடுகளான அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் தற்பொழுது கடைப்பிடித்துவரும் அணுகுமுறைகள் சிங்கள அரசிற்கு பெரும் அச்சத்தினைக் கொடுத்திருக்கின்றது. ஆனாலும் இந்தியாவும் சீனாவும் தனக்கு பக்கத்துணையாக இருக்கின்றது என்ற அசட்டுத் தைரியத்தில் சிங்களம் நிம்மதியடைகின்றது என்பதுவே உண்மை. இந்தியாவிற்கும் சீனாவிற்கும் இடையிலான பனிப்போர் என்றைக்கு உச்சநிலையை அடைகின்றதோ; அன்றைக்கு இலங்கை இவற்றின் பூரண ஆதரவினை இழக்கும் சாத்தியக்கூறுகள் உருவாகும்.

இவைதான் தனது பக்கபலம் என்று நினைத்து திமிருடன் ஏனைய உலகநாடுகளை பகைத்துக்கொள்ளும் சிங்களம் இவற்றின் ஆதரவையும் இழந்து அநாதையாய் அந்தரிக்கப்போகும் நாள் வெகுதொலைவில் இல்லை. ஈழவிடுதலைப் போராட்டமானது தமிழ்மக்களின் கைகளிலேயே கையளிக்கப்பட்டிருக்கும் நிலையில், அதை பிரதானமாக கொண்டு நடத்தவேண்டிய பொறுப்பும் கடமையும் புலம்பெயர் தமிழ் மக்களையே சார்ந்திருக்கின்றது.

மூன்று தசாப்த காலமாக புலிகள் தமது ஆயுதரீதியிலான போராட்டத்தினை முன்னெடுத்த நிலையில், அவர்கள் இராணுவ வெற்றிகளைவிட தமிழர்கள் மத்தியில் விடுதலை தொடர்பாக புரட்சிகரமான எழுச்சியையே மிகவும் எதிர்பார்த்தார்கள். ஆனால், எங்களின் விடுதலைக்காக போராடியவர்கள் எங்களிடம் எதிர்பார்த்த ஆகக்குறைந்த எதிர்பார்ப்பைக்கூட நிறைவேற்றாதவர்களாக நாங்கள் இருந்தோம்.

அன்று திலீபன் மக்களிடம் வேண்டிக்கொண்டதும் அதைத்தான். "மக்கள் புரட்சி" என்ற நிலையை அன்றே நாம் அடைந்திருப்போமானால், இன்று நாம் விடுதலை பெற்று பல வருடங்கள் ஆகியிருந்திருக்கும். அப்படியில்லாவிட்டாலும்… ஆகக்குறைந்தது, தமிழினத்தின் அழிவையாவது தடுத்திருந்திருக்கலாம். நடந்தவை நடந்து முடிந்ததாகவே இருக்கட்டும். இனிமேல் நடக்கப்போவதைப் பற்றி சிந்திப்போம். எமது விடுதலையென்பது எம்மிலேயே தங்கியுள்ளது. இவ்வளவுகாலமாய் அதை புலிகள் பெற்றுத்தருவார்கள் என்று சொல்லிச்சொல்லியே அனைத்துப் பொறுப்பையுமே அவர்களின் தலையில் சுமத்திவிட்டு வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தோம்.

பணத்தினை அள்ளி அள்ளி கொடுத்த நாங்கள் அவர்கள் எதிர்பார்த்த பக்கபலத்தினைக் கொடுக்கத் தவறிவிட்டோம். புலிகளை சர்வதேசம் தடை செய்தபோது, அதற்கும் எமக்கும் எந்த சம்பந்தமும் இல்லையென்ற வகையில் அமைதியாக விலகியிருந்தோம். புலிகளையும் தமிழ்மக்களையும் சர்வதேசம் வேறுபடுத்திப் பார்த்ததற்கும் அவர்களது போராட்டத்தினை பயங்கரவாதம் என முத்திரை குத்தியதற்கும் நாமே வழியமைத்தோம். அன்று நாங்கள் இழைத்த இந்தத் தவறுதான், இன்றைய அத்தனை அவலங்களுக்கும் காரணம்.

எங்கெல்லாம் மக்கள் புரட்சி ஏற்படவேண்டிய தேவை இருந்ததோ, அப்போதெல்லாம் நாம் அமைதியாக இருந்ததன் விளைவை வன்னி அவலங்களாய் அனுபவித்தோம். இனிவரும் காலங்களிலும் இப்படியான தவறுகளை இழைக்கப் போகின்றோமா??? நாங்கள் இதுவரை காலமும் இழைத்த தவறுகள் தான் எம்மை இந்த நிலைக்குக் கொண்டுவந்திருக்கின்றது என்ற உண்மையை உணர்ந்தவர்களாய் இனிவரும் காலங்களில்… நம் விடுதலைக்காய் நாமே போராடுவோம்.

மக்கள் புரட்சி என்பது ஒரு இலட்சியத்துக்காக ஒட்டுமொத்த மக்களும் ஒன்றிணைந்து ஒவ்வொருவரும் தம்மாலான பங்களிப்பினை தவறாது செய்வது என்பதேயாகும். "எமக்கு விடுதலை வேண்டும், அதை அடையும் வரை நாம் ஓயப்போவதில்லை" என்ற புரட்சிகரமான எண்ணத்தினை நாம் ஒவ்வொருவரும் நம் மனதில் விதைத்துக்கொள்ள வேண்டும்.

அதுவே மக்கள் புரட்சிக்கான அடிப்படை அடித்தளம். "மக்கள் புரட்சி வெடிக்கட்டும்" என்ற தியாகசீலனின் வேண்டுதலை சிரமேற்கொண்டு நம் தேசத்தின் விடுதலைக்காக நாம் போராடுவோம். நமது புரட்சிதான் நாளை நமக்கு சுதந்திரத்தைப் பெற்றுத்தரும்.

– பருத்தியன்