Posts Tagged ‘தமிழ்’

நாங்கள் மனிதரில்லை!

ஜூன் 22, 2010

நாங்கள் மனிதரில்லை!
பா. உதயகுமார் (நோர்வே)

ஒர் கொடிய நீண்ட இரவின் பிறப்பில்

எலும்பும் சதையுமாக

எரிந்து கொண்டிருந்தது

முள்ளிவாய்க்கால்.

இறந்த தாயின் முலையில்

குழந்தை பால் குடிக்க

இழுத்து வந்து

நெருப்பு மூட்டினர்

இருளின் நடுவே

சிலுவை தாங்கி

இறைவன் வருவான்

என நிலவைப் பார்த்தோம்

கண்களை மூடி

இது உன் விதி என்றது

எங்களின் வீட்டினுள்

யூதர்கள் நுழைந்தனர்

யேசுவைக் கேட்டனர்

ஆயிரம் ஆயிரம் சிலுவையில்

அவர்களை அறைந்தனர்

அடையாளம் காட்ட யூடாஸ் வந்தான்

மாவீரன் கல்லறையில்

மீண்டும் இரத்தம் வடிய

உயிர்த்திருந்தவர்களை

இன்னெருமுறை

புதைத்தனர்

கனவுகள் உடைந்து

கல்லறைக்குள் ஒளித்துக் கொண்டது

இரத்தமும் சதையுமாய்

எழுப்பிய சுவருக்குள்

எங்கள் முகங்கள்

எரிந்து கருகின.

முள்ளிவாய்க்கால் முழுமையாக

மூச்சிழந்தது

ஆயிரம் சிலுவையோடு அணைந்து போனது

அந்த உயிர்களின் கனவும் வாழ்வும்

கங்கையில் மிதந்த

பிணங்களைப் போல்

எங்களின் வயல்களில்

பிணங்கள் நீந்தின

எல்லாமே எரிந்து முடிந்தது

மிஞ்சிக் கிடக்கும் சாம்பலில் இருந்து

எலும்பை எண்ணிக் கணக்கெடுக்க

அங்கு யாரும்

சாட்சிகள் இல்லை

எரிந்து கிடக்கும் சாம்பலைத் தவிர

எஞ்சியிருப்பதற்கு

எங்களிடம் ஒன்றுமில்லை

மிஞ்சியிருக்கும் காக்கையும் குருவியும்

கரைந்த படி திரிய

நாறிக் கிடந்தன பிணங்கள்

நாங்கள் மனிதரில்லை என்றே

மூடிக் கிடக்கிறது முள்ளிவாய்க்கால்

புத்தரின் காவியினால்.

தாகம் தீர்த்தது சத்திய சோதனை

எங்களின் குருதியினால்.

மா.கெம்புகுமார். பி,ஏ, பி,எல்,
வழக்குரைஞர்
9245581684

Advertisements

துளிப்பா : கவிஞர் இரா.ரவி

ஜூன் 22, 2010

ஈழத்தில் நடந்தது இனப் படுகொலை

ஈவு இரக்கமற்ற கொடூரக் கொலை
வாழ வழியின்றி முள்வேலி
வாடி வதங்கினர் குழந்தைகள்
இழவை கேட்க நாதியில்லை

உலக மகா கொடூர கொலைக்காரன்
உலக வலம் நாளும் வருகிறான்
உலக நாடுகள் மன்றத்தான் வேடிக்கை பார்க்கிறான்
ஒருவரும் தட்டி கேட்கவில்லை
பலகாலம் ஏமாற்றி வாழ்கிறான்

மூட நம்பிக்கைகளில் ஒன்றானது தேர்தல்
மேதினியில் பணம் படைத்தவர்களே வேட்பாளர்கள்
மடயர்கள் மலிந்து விட்டனர்
மூளைக்கு வேலை இல்லை
அட பணம் வாங்கி வாக்களிக்கிறார்கள்.

போட்டி போட்டன தொலைக்காட்சிகள்
பெண்களை அழ வைத்துப் பார்ப்பதில்
ஏட்டிக்குப் போட்டி மாமியார்கள்
ஏதிர் தாக்குதலில் மருமகள்கள்
ஈட்டிக்காரனைத் தோற்கடித்தனர் சண்டையில்

பட்டுச்சேலை ஆசையை விட்டு விடு
பாவம் பட்டுப்பூச்சிகளை வாழ விடு
பட்டு மேனியாளுக்கு தேவையில்லை பட்டு
துட்டு அதிகம் முடங்கி விடுகின்றது
கட்டு கைத்தறி சேலை தினம் கட்டு

பொன் நகை மோகம் மலிந்தது
பெண்கள் பலரது மனமும் அடிமையானது
விண்ணை எட்டியது விலை உயர்ந்தது
வஞ்சியர் இனம் கடையில் குவிந்தது
ஆண்கள் இனம் அவதிப்பட்டது

கோடிகளை உதியம் பெறுகிறான் நடிகன்
கோடம்பாக்கத்து கோமகனாய் வலம் வருகிறான்
கொடி கட்டி பொழுதுபோக்குகின்றான் ரசிகன்
கட் அவுட்டிற்கு அபிஷேகம் செய்கிறான்
தடியால் அடி வாங்கி காயமும் படுகிறான்

தமிழர்களின் கலைகளை பறைசாற்றிடும் சிலை
பார்த்தவர்கள் வியப்பில் ஆகின்றனர் சிலை
இமி அளவும் இல்லை அதில் செயற்கை
இமைக்காமல் ரசித்து அடைந்தனர் இன்பம்
சாமி நம்பாதவரும் வியப்படைந்த நிலை

நடிகையை சேர்த்தனர் அரசியல் கட்சியில்
நல்லவர்கள் விலகி விட்டனர் அரசியலில்
கோடிகள் குவிக்க வாய்ப்பு வழங்கினார்கள்
கட்சியில் மேல்சபை பதவியும் தருவார்கள்
கேடிகள் பல்கிப் பெருகி விட்டார்கள்

ஆண் மான் குடிக்கட்டும் என்று பெண் மான்
பெண் மான் குடிக்கட்டும் என்று ஆண் மான்
இன்பக் காட்சி தமிழ் இலக்கியத்தில் காண்
இணை பிரியாத ஜோடிகளின் காதல்
எண்ணிலடங்காத இனிய உணர்வு தான்.

www.kavimalar.com

ஈழத்தமிழனின் செங்குருதியில் நடக்கும் செம்மொழி மாநாட்டின் அபத்தம்…

ஜூன் 21, 2010

புகழ்மிக்க வீட்டின் தாய் ஒருவளுக்கு இரண்டு பிள்ளைகள்… மூத்த பிள்ளையின் வாழ்க்கை மிகுந்த செழிப்புடன் வளமாக இருக்கிறது. வசதிகளுடன் தன்னிறைவோடு வாழ்கிறான். இளைய மகன் வாழ்வதற்கு வழி இல்லாமல், பசிக்கு உணவில்லமால், தங்க இடமில்லமால், சொல்லிக்கொள்ள ஊரில்லாமல், புலம் பெயர்ந்து வாழ்கிறான் .

உலகின் அனைத்து துன்பங்களையும் தன்னகத்தே குத்தகைக்கு எடுத்தவனை போல் எப்போதும் அழுகிறான். அழுது அழுது பூத்து போன கண்களில் தன் அண்ணனிடம் உதவி கேட்கிறான்.

அண்ணனுக்கோ அவனின் குரல்கள் காதில் விழுவாதாக இல்லை… உல்லாசங்களில் சல்லாபிக்கிறான். கேளிக்கைகளில் திளைக்கிறான். தனது ரத்தம் துன்பபடுவதை துச்சமென கருதுகிறான்.

ஒரு காலத்தில் ஊரே மெச்சிய பாரம்பரிய வீடு. அந்த வீட்டின் வாசற்கதவு யாவர்க்கும் திறந்தே கிடக்கும். அந்த வீட்டை யார் எவர் வேண்டுமானாலும் உரிமை கொண்டாடுவார்கள். உண்டு உறங்கி செல்ல யாவர்க்கும் அனுமதி உண்டு.
அன்பின் மழையில் முற்றம் ஈரமாகவே இருக்கும். அடுத்தவருக்காய் வரிந்து கட்டி கொண்டு அந்த வீட்டின் உருப்படிகள் வந்தாரை எல்லாம் வாழவைத்தது.

இந்த வீட்டின் அத்தனை புகழும், தாயானவள் அனைவருக்கும் அற நெறிகளை சொல்லி வளர்த்ததனால் வந்தது. உயர் பண்புகளை பிள்ளைகளுக்கு பயிற்றுவித்ததினால் வந்தது. காலம் ஒரு பிள்ளையை மடியிலும், மறு பிள்ளையை தரையிலும் கிடத்தியது. வசதி, மூத்த பிள்ளையை வெற்று நியாயம் பேச வைத்தது. இளையவனை புழுவென பார்க்க நினைத்தது.

தாயின் மார்பில் தவழ்ந்த குழந்தை, ஒரு வேலை தண்ணீருக்கும் அல்லல் படுவதை பார்க்க முடியாமல் வேதனை படுகிறாள். ஈன்றெடுத்த தாயின் மனது தத்தளித்தது. புகழால் நிரம்பிய தாயின் பெருமை, வலிகளால் வெதும்புகிறது.மூத்த பிள்ளைக்கு மகன் பிறந்து அவன் திருமண வயதில் இருக்க… தன் இளைய மகனுக்கோ இன்னும் வழியாகவில்லை, வாழ்க்கையும் அமையவில்லை…

தன் இளைய மகன் திருமணமாகாது, சமுகத்தின் அங்கீகாரத்திற்கு போராடிகொண்டிருக்கும் அவலத்தை காண சகியாத தாய் விம்மி அழுகிறாள். மூத்த மகன் தன் தாயின் கண்ணீரை துடைக்க, அவளை மகிழ்விக்க, அவளுக்கு 60- ம் கல்யாணம் செய்து வைக்கலாம் என்று முடிவு செய்கிறான்.

இந்த அபத்தம் வேறு எந்த தாய்க்கும் அல்ல… நம் தமிழ் தாய்க்கு தான்… அந்த அபத்தம் வேறு எதுவும் அல்ல… உலக தமிழ் செம்மொழி மாநாடு தான். இளையமகன் வேறு யாரும் அல்ல… நம் ஈழ தமிழ் மகன் தான்…

…திரு

www.thirupakkangal.blogspot.com

எங்கேயோ கேட்ட குரல்………..!

ஜனவரி 6, 2010

மீனா – பிரசன்ட் மிஸ்
ரோஷ்னா – பிரசன்ட் மிஸ்
புனிதா – பிரசன்ட் மிஸ்
புனிதா ஆர் யூ நியூ அட்மிஷன் ? எஸ் மிஸ்
உனக்கு செகண்ட் லாங்வேஜ் தமிழ்தானே, புனிதா ?
நோ! டமில்…? நோ மிஸ் – ஐ கேவ் டேக்கன் ப்ரெஞ்ச்
இஸ் இட்? இன் வாட் லாங்வேஜ் டூ யூ ஸ்பீக் வித் யுவர் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலீஷ் மிஸ்.
வித் யுவர் கிராண்ட் பேரண்ட்ஸ்?
இன் இங்கிலிஷ் ஒன்லி மிஸ்.
தென் ஹூ ஸ்பீக்ஸ் இன் டமில் அட் ஹோம்?
மை சர்வண்ட் ஸ்பீக்ஸ் இன் டமில் (எங்கள் வீட்டு வேலைக்காரி மட்டும் தமிழில் பேசுகிறார்)
இஸ் நாட் டமில் யுவர் மதர் டங் ?
மை மதர் டங் இஸ் டமில் ஒன்லி ! பட் அட் ஹோம் ஒன்லி வித் மை சர்வன்ட் ஐ ஸ்பீக் இன் டமில்.
தமிழ் நாட்டின் தலைநகர் சென்னை மாநகரில் ஒரு மத்திய அரசுப் பள்ளியில்
காதாரக் கேட்ட நிகழ்ச்சி இது.

தமிழ் மிகவும் பண்பட்ட மொழி – என்றார் மாக்சுமுல்லர்
தமிழ் வேறு எந்த மொழிக்கும் தாழ்ந்த மொழியன்று என்றார் போப்,
தமிழ் நிறைந்து, தெளிந்து, ஒழுங்காய் வளர்ந்துள்ள மொழிகள் எல்லாவற்றுள்ளும் தலை சிறந்த ஒரு மொழி என்றார் டெய்லர்.
தமிழ் பண்டையது. சிறப்பு உடையது. உயர்வடைந்தது. விரும்பினால் வடமொழி உதவியின்றித் தனித்தியங்க வல்லது – என்றார் கால்டுவெல்
எண்ணுவதற்கும் பேசுவதற்கும் வேறு எந்த ஐரோப்பிய மொழியைவிடச் சிறந்த மொழி தமிழ் மொழி என்றார் விட்டினி.

இவ்வாறு தமிழ் மொழியின் சிறப்பைப் பற்றி மேனாட்டுப் பேரறிஞர்கள் போற்றிப் புகழ்ந்துள்ளனர்.

தமிழால் முடியும் – ஆனால், தமிழர்களால் முடிவதில்லையே அது ஏன்? சற்றே சிந்திப்பீர் !

நன்றி: தமிழ் இலெமூரியா இதழ்

தமிழ் காக்கும் உலகளாவிய விடுதலை இயக்கம்

ஜனவரி 4, 2010

அன்பும், பண்பும், பாசமும் நிறைந்த தமிழீழ மக்களே! இந்தப் பூமிப்பந்தில் சிறு உயிரினம் தொடக்கம் மனித இனம் வரை தமது இருப்பிற்காகவும், நிலைப்பிற்காகவும் போராடியே வாழ்ந்து வந்திருக்கிறது. தொடர்ந்தும் போராடிக்கொண்டே இருக்கிறது.

குறிப்பிட்ட ஒரு இனத்தை அழிப்பது என்பது வெறுமனே உயிர் சேதங்களை மட்டுமே ஏற்படுத்தி அழித்துவிடலாம் என்றில்லை. அந்த இனத்தின் மொழியை, கலாச்சாரத்தை, பொருளாதாரத்தை அழிப்பதன் மூலமும் இனத்தினிடையே பல உப தலைப்புகளிலும், சில பிரதான தலைப்புகளின் கீழும் பாகுபாடுகளை, பிரிவினைகளை, முறண்பாடுகளை ஏற்படுத்துவதன் மூலம் அந்த இனங்களுக்கிடையிலான போட்டியிலும் சிதறடிக்கப்பட்டு அதன் வலுவாக இயங்கும் தன்மை இல்லாதொழிக்கப்படும்.

காலம் காலமாக தமிழினப் பாகுபாடு, பிரிவினை, சாதித்துவம், என்ற சதி வலைகளிற்குள் அடக்கப்பட்டதன் இயல்பாக இயங்கும் நிலையை இழந்து பல வரலாற்று சந்தர்ப்பங்கள் எங்களுக்கு ஒரு மிகப்பெரும் பாடமாக அமைந்துள்ளது.

எதிரிகள் தீட்டிய அத்தனை பாகுபாட்டு நிலைகளையும் குழிதோண்டி புதைத்துவிட்டு ஒற்றுமை, சகோதரத்துவம், தோழமை என்ற பாசப்பிணைப்புகளின் கீழ் எமது மொழி, எமது கலாச்சாரத்தை, எமது பண்பாட்டை எதிர்கால சந்ததிக்கு பல வழிகளிலும் போதித்து அவற்றை காதலிக்க வைக்கவேண்டும்.

நாம் நமது சமுதாயத்தில் பலவீனப் பட்டுள்ளவர்களை பல வழிகளிலும் பலப்படுத்தவேண்டும். அது பொருளாதார ரீதியாகவும், ஒவ்வொருவரையும் பலப்படுத்த வேண்டும். முன்னேற்றகரமான நிலையில் உள்ள எம் இனத்தவரைப் பார்த்து பெமைப்பட்டுக் கொள்ளவேண்மே தவிர பொறாமைப்பட்டுக்கொள்ளக் கூடாது. அதே வேளை முன்னேற்றமான நிலையில் உள்ளவர்கள் பலவீனமான நிலையில் உள்ளவர்களுக்கு பல்வேறு வழிகளிலும் உதவி புரிந்தவர்களையும் பலம்மிக்கவர்களாகவும் மாற்ற வேண்டும். இதன்மூலம் யூத மக்களைப்போல் ஒட்டுமொத்தமாக தமிழினம் பலமடைவதன் மூலம் தமிழினம் தன் விடுதலைப்படகை மிக வேகமாக இயக்கமுடியும்.

மிகவும் பலம் மிக்கவர்களும், மிகவும் பலவீனமானவர்களும் என இனம் பல்வேறுபட்ட மட்டங்களில் ஏற்றத்தாழ்வுகள் உள்ளதாயின் துவாரங்கள் உள்ள கப்பலில் கடற்பயணம் செய்வது போன்று அமைந்துவிடும். ஆகவே சமூகத்தில் நிலவும் அத்தனை துவாரங்களையும் அடைத்து சர்வ உலகத்தையும் படைத்த இறைசக்தியின் துணையோடு ஒரு பலமான விடுதலைச்சக்தியாக ஒன்றிணைந்து ஒற்றுமையின் முதன்மை இனமாக நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து நமது இனத்தின் பிரதான இலட்சியமான ஐக்கிய சுதந்திர தமிழீழத்தை அடைவதற்கு முன்னரிலும் இன்னும் வேகமாக பல வழிகளிலும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும்.

எங்களில் எவரையேனும் தாழ்த்துவதன் மூலமோ, ஒதுக்கி வைப்பதன் மூலமோ நாம் பலமடைந்துவிட முடியாது. இன்று உலகப்பரப்பில் வாழும் தமிழர்கள் ஒரு குடையின் கீழ் திரண்டு தமது அரசியல், பொருளாதார, கல்வி, சமூக இருப்பைப் பலப்படுத்த வேண்டும். அதற்கு "நாடுகடந்த அரசு" ஒரு பெரும் செயற்கரிய சாதனை வடிவாக மக்களின் கரங்கலில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதனை உலகளாவிய தமிழ் மக்கள் ஓர் அணியில் நின்று தூக்கி நிறுத்துவதன் மூலம் எமக்கென தனியான கொடியின் கீழ் ஓர் தாய்வயிற்றுப் பிள்ளைகளாய் நாம் நமக்கான பாதையைத் திறந்து தொடர்ந்து பயணிக்கலாம் என நம்புகிறோம்.

அதேவேளை தமிழர்களாகிய நாம் சிந்துவெளி நாகரீகத்திலிருந்து சிந்திய ஒரு துளியாகவே எம்மை நாம் பார்க்கின்றோம் என்பதால் எக்காலத்திலும் எமது தாய், தந்தையாகிய இந்தியாவின் இறமைக்கும் ஐக்கியத்திற்கும் எதிராக செயற்படமாட்டோம் என்பது மட்டுமல்ல எமது தமிழீழத்தினுள் தமது கால்களை அகலப்பதிக்கும் இந்தியாவிற்கெதிரான அத்தனை சக்திகளையும் நாம் எதிர்பார்ப்போம் என்பதில் நாம் அனைவரும் நம்பிக்கையோடு உறுதிப்படுத்துகின்றோம்.

ஈழத்திலும், மலையகத்திலும் மற்றும் ஏனைய உலகப்பரப்பிலும் எங்கெங்கெல்லாம் தமிழர்கள் ஒதுக்கப்பட்டும், அடக்கப்பட்டும் வாழ்கின்றார்களோ அவர்களின் நல்வாழ்விற்காக நாம் தொடர்ந்து பாடுபடுவோம்.

கிறிஸ்தவர்களுக்கு பைபிள் போலவும், இஸ்லாமியருக்கு புனித குறாண் போலவும் தமிழர்களுக்கு புனித நூலாக திருமூலர், அகத்தியர், ஒளவையார், அகத்தியர், திருவள்ளுவரின் ஒன்றாகச்சேர்த்து அச்சடிக்கப்பட்ட நூல் தான் எங்களுடைய வழிகாட்டியான புனிதனூலாகும். இவற்றை நூலாக்கி அச்சுத்துறையினர் அச்சேற்றி ஒவ்வொரு தமிழ் நெஞ்சங்களிலும் சேர்க்குமாறு உள்ளன்போடு இந்த விடுதலை இயக்கம் வேண்டிநிற்கிறது. அத்தோடு மாதம் ஒரு முறையாவது மாத வழிபாட்டு தலங்களில் மக்கள் கூடி சமூக வளர்ச்சி பற்றி சிந்தித்து ஒற்றுமை என்ற பலத்தை கட்டி எழுப்புமாறும் கேட்டுக்கொள்கின்றோம்.

தந்தை பெரியார், தந்தை செல்வநாயகம், போன்ற நல் இதயங்களின் பிரதான கனவாகிய தமிழனுக்கென்றொரு நாடு வேண்டும் என்பதை நாம் நிறைவேற்றும்வரை தூங்காது, துவளாது மனம் சோராது எமது பயணத்தை தொடர்வோம்."உலகத்தமிழரின் தாகம் தமிழீழத்தாயகம்"

தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?

திசெம்பர் 11, 2009

இலங்கையில் போரை நிறுத்தச்சொல்லி
எத்தனையோ பேர் உயிர் மாயித்தனர்
உண்ணாவிரதம் இருந்தனர் பலர்
உயிரையும் உடலையும் தீயுக்கு இரையாக்கினர்
மாவீரன் முத்துக்குமார் மரித்த்போதே
மூர்க்கப்போரை நிறுத்தியிருந்தால்
ஈழத்தில் லட்சம் உயிர் வாழ்ந்திருக்கும்
ஈழ தமிழும் அழகாய் நிலைத்திருக்கும்
கடுமையாக கவன ஈர்ப்பு செய்த போதும்
கண்டுகொள்ளவில்லை ஆளும் காங்கிரஸ்
ஒட்டுமொத்த தமிழினமே அழிந்தது ஈழத்தில்
ஒரு வருத்தம் கூட தெரிவிக்கவில்லை
விலை மதிப்பற்ற மனித உயிர்கள்
விலை போனது காங்கிரஸ் அலட்சியத்தால்
தனி ஒரு மனிதன் சந்திரசேகர் உண்ணாவிரதத்தால்
தனி தெலுங்கானா உருவாக்க சம்மதித்த காங்கிரஸ்
இந்தியாவின் எல்லா மாநிலத்திலும் ஒருவர்
இனி உண்ணாவிரதம் இருந்தால் பிரிப்பார்களா ?
தெலுங்கர் உயிர் மட்டும் உசத்தியா ?
தமிழர் உயிர் மட்டும் மட்டமா ?
மவுனமாக இருந்தே மவுன வலி தந்தனர்
மவுனமாக இருந்தே தமிழர் தக்க பதில்தருவர்
இரா .இரவி

கன்னித் தமிழ் “பன்னி” தமிழ் ஆகிவிட்டது

நவம்பர் 17, 2009

காலைல எழுந்திருச்சி “” பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி,
அப்புறம் பன்னி ………..
…………
இவ்வாறான வரிகளை குறிப்பிட்டு கவிக்கோ அப்துல் ரகுமான் கீழ்கண்டவாறு ஒரு பேட்டியில் கூறினார்: கன்னித் தமிழ் “பன்னி” தமிழ் ஆகிவிட்டது …!!!!

தோழர்களே இவன்றவரை நாம் “பன்னி”யை தவிர்ப்போம் .!!