Posts Tagged ‘அமைதிப்படை’

ராஜீவுக்கு பிரபாகரன் எழுதிய கடிதங்கள்!

ஒக்ரோபர் 4, 2009

இந்திய அமைதிப் படைக்கும் விடுதலைப் புலிகளுக்கும் நேரடிப் போர் ஏற்பட்ட
இரண்டாவது நாளில் பிரபாகரன், பிரதமர் ராஜீவ் காந்திக்கு ஒரு கடிதம் எழுதினார்.
அந்தக் கடிதத்தில் உள்ள விவரம் வருமாறு:

“”மிகவும் அபாயகரமான சூழ்நிலையில் இந்த அவசரக் கடிதத்தை அனுப்புகிறேன்.
அமைதிப்படை விடுதலைப் புலிகளுடன் போர் தொடுப்பது என்ற நிலை எடுத்த பிறகு
இதன்மூலம் எதிர்த் தாக்குதல் நடத்தும்படி நாங்கள் நிர்ப்பந்திக்கப்படுகிறோம்.
விடுதலைப் புலிகளின் இந்த எதிர்த்தாக்குதல் என்பது எங்களையும், எங்களது
மக்களையும் தற்காத்துக் கொள்ளவே மேற்கொள்ளப்படுகின்றது.

அமைதிப்படை எங்கள் மீது போர் தொடுப்பது என்பதைக் கண்ட எங்களது மக்கள்
அதிர்ந்து போயிருக்கிறார்கள். எங்கள் மீது தொடுக்கப்பட்ட போரானது இந்திய-இலங்கை
ஒப்பந்தத்தின் ஷரத்துகளுக்கு முரணானதும், ஓர் அத்துமீறலுமாகும். இது எங்களது
கருத்து மட்டுமல்ல; தமிழீழ மக்களின் ஒட்டுமொத்த கருத்துமாகும்.

இந்த யுத்தத்தில் அமைதிப் படையுடன் சிங்களப் படையும் சேர்ந்துகொண்டதால்
மக்கள் கடுமையாகப் பாதிக்கப்படுவார்கள். இதனால் மனித இழப்பு என்பது பெருமளவில்
இருக்கும். இத்தகைய அழிவுகளுக்கும், விளைவுகளுக்கும் இந்தியாவே பொறுப்பு ஏற்க
வேண்டும்.

இந்நிலையில் எமது தாழ்மையான விண்ணப்பம் என்னவென்றால், அமைதியை நிலைநாட்டவும்,
நன்நம்பிக்கையை வளர்க்கவும், இந்தியாவுடன் எங்களது உறவுகள் மேம்பாடடையவும்,
உடனடியாகப் போர் நிறுத்தம் அறிவிக்கும்படி வலியுறுத்துகிறோம்” என்று 1987,
அக்டோபர் 12-ஆம் தேதி, எழுதப்பட்ட கடிதத்தில் வேண்டியிருந்தார்.

இந்தக் கடிதத்துக்கு எந்தவிதமான பதிலோ, அதன் பேரிலான நடவடிக்கைகளோ இல்லாத
நிலையில் மீண்டும் ஒரு கடிதத்தை எழுதினார். அந்தக் கடிதம் 14-10-1987 அன்று
எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில்,

“”நாளுக்கு நாள் தமிழீழத்தில் மக்கள் கொல்லப்படுவதுடன், அழிவுகளும்
அதிகரித்து வரும் நிலையில் இந்தக் கடிதத்தை எழுதுவதாக” என்று குறிப்பிட்டுள்ள
பிரபாகரன் மேலும் குறிப்பிடுவதாவது:

“”இதுநாள்வரை நடந்த போரில் 150 பேருக்கும் மேற்பட்ட மக்கள்
கொல்லப்பட்டிருக்கிறார்கள். 500 பேருக்கும் மேல் காயமடைந்திருக்கிறார்கள்.
எந்திரத் துப்பாக்கி மூலம் சுடுதல், ராக்கெட் குண்டுவீச்சு, வான் மூலமான
குண்டுவீச்சுகளில் இந்த இழப்புகளும் விளைவுகளும் ஏற்பட்டுள்ளன. எங்களது
இயக்கத்தின் போராளிகள், தேடுதல் மற்றும் அழித்தல் நடவடிக்கையால்
நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டிருக்கிறார்கள். தற்சமயம் எங்களால் 18 அமைதிப்படை
வீரர்கள் கைது செய்யப்பட்டு எங்களது காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இந்தத் திடீர்ப் போர் காரணமாக, ஏராளமான மக்கள், அமைதிப்படைக் காலத்தில்,
முதன்முதலாகத் தங்கள் வாழ்விடத்திலேயே, அகதிகளாக்கப்பட்டுள்ளனர். தொடர் ஊரடங்கு
அமலினால் உணவுக்கும் குடிநீருக்கும் மற்றும் தங்கள் தேவைகளுக்கும் அவர்கள்
ஆலாய்ப் பறக்கிறார்கள்.

இந்திய அமைதிப்படை எங்களது தாயகத்துக்கு அமைதியையும்-சுமுகச்சூழலையும்
ஏற்படுத்துவதற்காக வந்திறங்கி, எங்கள் மக்கள் மீது கொடுமைகளை இழைத்து வருகிறது.
இது முற்றிலும் மனிதநேயத்துக்கு அப்பாற்பட்ட செயலாகும்.

அக்டோபர் 11-ஆம் தேதி காலையில், யாழ் பல்கலைக்கழக எல்லைக்குள் 40 பொதுமக்கள்
இந்திய அதிரடிப்படை வீரர்களால் இறக்க நேர்ந்தது எதனால்? அந்தப் பகுதி
கல்விக்கூடங்கள் நிறைந்த பகுதி. அங்கு அதிரடி நடவடிக்கை ஏன் நடத்தப்பட்டது?
ஈழமுரசு, முரசொலி பத்திரிகை அலுவலகங்கள் குண்டுவீசித் தாக்கப்பட்டு
அழிக்கப்பட்டதுடன் அங்கிருந்த செய்தியாளர்கள், ஊழியர்கள் கைது
செய்யப்பட்டிருக்கிறார்கள். யாழ் பொது மருத்துவமனை குண்டுவீச்சுக்கு
ஆளாகியுள்ளது. இந்தத் தாக்குதலில் டாக்டர்கள், நர்ஸ்கள், பணியாளர்கள்
இறந்திருக்கிறார்கள். யாழ் பல்கலை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்டு
அங்கிருந்த பெரும்பாலான கட்டடங்கள் நாசமாக்கப்பட்டு விட்டன.

அமைதிப்படை கனரக ஆயுதங்களைப் பயன்படுத்துவதில்லை என்று பிரசாரம்
செய்யப்படுகிறது. ஆனால் வான்வீதியிலான தாக்குதல் எவ்வாறு நடைபெறுகிறது?
உண்மையில் இந்திய, இலங்கைப் படைகள் போர் விமானங்கள், ஹெலிகாப்டர்களைப்
பயன்படுத்தி பெரும் அழிவை ஏற்படுத்திக் கொண்டிருக்கின்றன.

அமைதிப் படையின் வருகையும் அதன் நோக்கமும் மக்களுக்கு இயல்பு வாழ்வைத் தருவது
என்பது; ஆனால் நடப்பதோ வேறு. அமைதிப்படையின் அத்துமீறல்களுக்கு சட்டபூர்வ உதவி
கோர முடியாத நிலையுள்ளது. எனவே இதுவரை நடைபெற்றுள்ள அத்துமீறலுக்கும்,
அழிவுகளுக்குமான உண்மை விவரம் அறிய, உண்மை அறியும் குழுவொன்றுக்கு உடனடியாக
ஏற்பாடு செய்யுங்கள்.

இடைக்கால அரசொன்றை அமைப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்ய நாங்கள் அழைக்கப்பட்டோம்.
அதில் பல முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்மூலம் எங்களது இயக்கத்தின் வலு
உணர்ந்தே அழைக்கப்பட்டோம். இந்தியாவும் இலங்கையும் எங்களுக்கு வாக்களித்தபடி,
இடைக்கால அரசமைக்க வேண்டி, ஆயுதங்களைக் கையளிக்கவும் உறுதியளிக்கிறேன்.

ஆனால் துரதிருஷ்டவசமாக எங்கள் மீது யுத்தம் தொடுக்கப்பட்டுவிட்டது; அதுவும்
கிழக்கு மாகாணத்தில் ராணுவ வீரர்கள் மீது ஒரு தாக்குதலை நடத்தி, அந்தப் பழியை
விடுதலைப் புலிகள் மீது சுமத்தி இருக்கிறார்கள்! கிழக்கில் நடைபெறும் இன
மோதல்களில் எங்களது இயக்கத்துக்கு எந்தப் பங்கும் இல்லை. ஆனால், பழி எங்கள்
மீது சுமத்தப்படுகிறது.

தற்சமயம் புலேந்திரன், குமரப்பா மரணத்தினாலும் அங்கு வன்முறைகள்
வெடித்துள்ளதற்கு சிங்களப் படையே காரணம். இவ்விரு போராளிகளும் திருகோணமலை
மற்றும் மட்டக்களப்பைச் சேர்ந்த எங்கள் இயக்கத்தின் தளபதிகள் ஆவர். அவர்களது
கைதால், பாரதூரமான விளைவுகள் ஏற்படுமென நாங்கள், தூதுவர் ஜே.என். தீட்சித்தை
எச்சரித்தோம். அவரும் ஜெயவர்த்தனாவைச் சந்தித்தார். ஆனால் தீர்வு
காணப்படவில்லை..

எங்களுக்கென்று சில கோட்பாடுகளை நாங்கள் வைத்திருந்தும், அந்தக்
கோட்பாடுகளையெல்லாம் ஒதுக்கி வைத்து, இந்திய-இலங்கை ஒப்பந்தத்துக்கு ஆதரவு
தெரிவித்தோம். ஒத்துழைப்பு கொடுத்தோம். ஆனால் இந்தியா எங்களை ஒதுக்கியது.
தனிமைப்படுத்த முயன்றது. நான் மீண்டும் வலியுறுத்துவது என்னவென்றால், போர்
நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தையில் இறங்குவோம் என்பதுதான்” என்று
அக்கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்தக் கடிதத்துக்கும் உரிய நடவடிக்கைகள் இல்லை. எனவே 1988 ஜனவரி 13-இல்
இறுதியாக ஒரு கடிதம் எழுதினார். அதில் ஆயுதக் கையளிப்பு மற்றும் ஏற்றுக்கொண்ட
இடைக்கால அரசை, எழுதப்படாத ஒப்பந்தப்படி நடைமுறைப்படுத்த முன்வருமாறும்
குறிப்பிட்டு எழுதினார். அக்கடிதத்தின் விவரம் வருமாறு:

“”நல்லெண்ண நடவடிக்கையாக அமைதிப்படையின் முகாமில் அடைபட்டிருக்கும் எங்களது
போராளிகளையும் ஆதரவாளர்களையும் விடுவிக்கும்படி கோருகிறோம். எங்களது
போராளிகளுக்கு உண்மையான பொது மன்னிப்பை வழங்கும்படி ஜெயவர்த்தனாவை
வலியுறுத்துவதுடன், அதனை அமல்படுத்தவும் தாங்கள் வலியுறுத்த வேண்டுமாயும்
கோருகிறோம்.

தாங்கள் தில்லியில் ஒப்பந்தத்துக்கு முன்பாகக் குறிப்பிட்டபடி, இடைக்கால
அரசை அமைத்து, அதனை விடுதலைப் புலிகள் கோரியபடி அளிக்க வேண்டுமென்றும் கேட்டுக்
கொள்கிறோம். இதற்குத் தடையாக இருக்கும் என்று கருதும்பட்சத்தில் எங்களது
ஆயுதங்களைக் கீழே போடவும் தயார் என மீண்டும் – உறுதியளிக்கிறோம். மக்கள்
அமைதியுடன் வாழ, எங்களது இயக்கத்தின் ஒத்துழைப்பை நல்கவும் தயாராக இருக்கிறோம்.

இடைக்கால அரசு என்கிற திட்டம் தற்போது பாதியில் உள்ளது. விடுதலைப் புலிகள்
அமைப்புக்கு தாங்கள் அளித்த வாக்குப்படி, இவ்வாய்ப்பு வழங்கப்படும் பட்சத்தில்,
மாநில அளவிலான உரிமைகளுக்கும் சுயநிர்ணய ஆட்சிக்கும் உரியவற்றையும் திட்டமிட
முடியும்.

தமிழீழ மக்களின் துயர்போக்க, அவர்கள் தங்களது வாழ்விடத்தில் வசிக்க, போர்
நிறுத்தம் அறிவித்து, பேச்சுவார்த்தை தொடங்க வேண்டுமாயும், இதற்கான அமைதிச்
சூழலை உருவாக்கும்படி மீண்டும் கேட்டுக் கொள்கிறேன்” என்றும் கூறியுள்ளார்
(கடிதங்கள் ஆதாரம்: அன்டன் பாலசிங்கம் எழுதிய வார் அண்ட் பீஸ்).

இந்தக் கடிதங்களுக்கு எந்த பதிலும் பிரதமர் தரப்பில் இல்லை. அவர் உளவு
அமைப்பின் தகவல்களுக்கே முக்கியத்துவம் அளித்தார் என்றே அப்போதைய அமைதிப் படை
தளபதிகள் தங்கள் நூல்களில் கூறியுள்ளனர்.

மாறாக விடுதலைப் புலிகளை இயக்கங்களுக்கிடையே தனிமைப்படுத்தவும்,
மக்களுக்கிடையே அந்நியப்படுத்தும் முயற்சியிலும் இறங்க அமைதிப்படைக்கு
உத்தரவிடப்பட்டது.

Advertisements